மருந்துக் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர தாக்குதலாக மாறி, 22 வயது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் முதல் ஆண்டு படித்து வருபவர் அபிஜீத் சிங் சண்டேல் (22). இவர் மருந்து வாங்குவதற்காக ஒரு உள்ளூர் மருத்துவக் கடைக்கு சென்றிருந்தார். அப்போது மருந்தின் விலை குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, கடை உதவியாளர் அமர் சிங், அவரது சகோதரர் விஜய் சிங், மேலும் பிரின்ஸ் ராஜ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிகில் ஆகியோர் இணைந்து மாணவரை தாக்கினர். அவர்கள் அபிஜீத்தின் தலையில் அடித்து, தரையில் விழச் செய்தனர். பின்னர், கூர்மையான ஆயுதம் கொண்டு அவரது வயிற்றை கிழித்ததுடன், ஒரு கையின் இரண்டு விரல்களையும் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

கடுமையாக காயமடைந்த அபிஜீத், உயிர் தப்பும் முயற்சியில் தப்பி ஓடினார். அப்போது மீண்டும் தாக்குதலாளிகள் அவரை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அபிஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் இடத்திலிருந்து தப்பி ஓடினர். காயமடைந்த அபிஜீத் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தலையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், நிலைமை மோசமாக  உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.