அலுவலகம் ஒன்றுக்கும் செல்லாமல், இரு ஆண்டுகளில் ரூ.37.54 லட்சம் சம்பாதித்ததாக வெளிவந்ததால், தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை இயக்குநரான பிரத்யுமன் தீட்சித் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு (ACB) விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவின் பேரில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மனுவில், ராஜ்காம் இன்ஃபோ சர்வீசஸ் நிறுவனத்தின் இணை இயக்குநராக பணியாற்றும் பிரத்யுமன் தீட்சித், அரசாங்க டெண்டர்களைப் பெற்றிருந்த இரண்டு தனியார் நிறுவனங்களான ஓரியன்ப்ரோ சால்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் போன்ற நிறுவனங்களில் தன்னுடைய மனைவியை போலியாக வேலைக்கு அமர்த்தி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த இரண்டு நிறுவனங்களிலுமே அவர் தன்னுடைய மனைவியின் வருகை பதிவேடு போலியாக கணக்கு காட்டி மாதந்தோறும் சம்பளம் பெற்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், ACB இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில், 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை, பூனம் தீட்சித்தின் ஐந்து தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு, மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.37,54,405 தொகையை “சம்பளம்” என பெயரிட்டு மாற்றியிருப்பது தெரியவந்தது.

1பூனம் தீட்சித் எந்த அலுவலகத்திற்கும் வருகை தரவில்லை என்று ஏசிபி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரத்யுமன் தீட்சித் தனது மனைவியின் போலியான வருகை அறிக்கைகளைத் தானே அங்கீகரித்ததாகவும், பூனம் தீட்சித் இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ட்ரீஜென் மென்பொருள் நிறுவனத்திடமிருந்து ‘ஃப்ரீலான்சிங்’ என்ற பெயரில் பணம் பெற்றிருந்த நிலையில், அதே நேரத்தில் ஓரியன்ப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றியதாகக் காட்டப்பட்டுள்ளார். மேலும் இந்தக் காலகட்டத்தில், இரு நிறுவனங்களும் அரசு டெண்டர்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.