கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினார். இதற்காக ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவன இயக்குனரான அருண், ஹேமலதா ஆகியோரை சந்தித்து வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு சந்திரமோகன் கூறியுள்ளார்.

இதற்காக அவர்கள் முன்பணமாக சந்திரமோகனிடம் இருந்து 2 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு இன்று வரை வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்திரன் மகன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து சந்திரமோகனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சந்திரமோகன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியதில் இதுவரை 7 பேரிடம் 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வரை தம்பதியினர் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் ஹேமலதாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.