ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற குழந்தையின் கண் முன்னே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த 19 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்தத் துணிகரக் கொலை வழக்கை சில மணி நேரங்களிலேயே போலீஸார் துப்புலக்கியுள்ளனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ரமேஷ். இவருக்கும் ஆந்திராவின் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஹாசினி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ரமேஷ் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது வாழ்க்கை வெளியில் மகிழ்ச்சியாகத் தெரிந்தாலும், ஹாசினிக்குத் தனது சிறுவயது நண்பரான யுகந்தர் (20) என்ற வாலிபருடன் திருமணத்திற்குப் பிறகும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது. தங்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரமேஷைத் தீர்த்துக்கட்ட இருவரும் சேர்ந்து ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டபடி, கடந்த செவ்வாய்க்கிழமை குடுப்பள்ளியில் உள்ள ஒரு கோயிலுக்குச் செல்லலாம் என ரமேஷை ஹாசினி வற்புறுத்தி அழைத்துள்ளார். கணவர் ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் புறப்பட்டுள்ளார். செல்லும் வழியெல்லாம் தனது கள்ளக்காதலன் யுகந்தருக்கு மொபைல் போன் மூலம் ஹாசினி ‘லைவ் லொகேஷன்’ அனுப்பி வழிநடத்தியுள்ளார். மலைப்பாதையின் மூன்றாவது வளைவு அருகே சென்றபோது, ஹாசினி திட்டமிட்டுத் தனது கைப்பையைக் கீழே போட்டுள்ளார். பையை எடுப்பதற்காக ரமேஷ் பைக்கை நிறுத்திய கணமே, அங்கே பதுங்கியிருந்த யுகந்தரும் அவனது நண்பர்களும் ரமேஷை நோக்கிப் பாய்ந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்கக் காட்டுக்குள் ஓடிய ரமேஷை விரட்டி விரட்டி, கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த பயங்கரம் அனைத்தும் ரமேஷின் சின்னஞ்சிறு குழந்தையின் கண் முன்னேயே நடந்துள்ளது. கொலைக்குப் பிறகு, கணவனின் பைக்கிலேயே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்களுடன் ஹாசினி தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. மொபைல் எண்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், உடலைக் கைப்பற்றி மனைவி ஹாசினி, கள்ளக்காதலன் யுகந்தர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இவர்களது திருமணம் நடந்தபோது ஹாசினி 9-ஆம் வகுப்பு படித்த மைனர் சிறுமி என கிராம மக்கள் கூறியதை அடுத்து, இந்த வழக்கில் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.