உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு  மார்க்கெட் பகுதியில், வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களைத் தூக்கி வீசி பொதுமக்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபரை பொதுமக்கள் மற்றும் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வாரணாசிக்குள் நுழைந்த அந்த வெளிநாட்டு வாலிபர், திடீரென வெறிபிடித்தது போல் அங்கிருந்த வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டின் மாடிகளுக்கு ஓடிச் சென்று அங்கிருந்த வீட்டுப் உபயோகப் பொருட்களைக் கீழே தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுத்து அவரை அமைதிப்படுத்த முயன்ற உள்ளூர் மக்களின் கையை அவர் கொடூரமாகக் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பயமும் குழப்பமும் நீடித்தது.

 

View this post on Instagram

 

A post shared by Dalimss News Banaras (@dalimss.news.banaras)

அங்கிருந்த குறுகலான தெருக்களில் பொதுமக்களைத் துரத்தித் துரத்தித் தாக்கிய அந்த நபரை, ஒருகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வளைத்துப் பிடித்தனர். அவர் தொடர்ந்து ஆக்ரோஷமாகக் கத்தியும், குதித்தும் ரகளையில் ஈடுபட்ட போதிலும், பொதுமக்கள் அவரை மாடியில் இருந்து கீழே கொண்டு வந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீஸார், அந்த நபரை மீட்க முயன்றனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் அந்த வெளிநாட்டு வாலிபர் ஆத்திரமடைந்து, ‘கோ பேக்’ (வெளியே போங்கள்) என்று சத்தமிட்டு போலீஸாரையே மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, போலீஸார் அந்த நபரை அதிரடியாகக் கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வெளிநாட்டு வாலிபர்  போதையில் இருந்தாரா, அல்லது ஏதேனும் போதை மருந்து அதிகமாக உள்கொண்டதால் இப்படி நடந்துகொண்டாரா, அல்லது அவருக்கு மனநலப் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகக் போலீசார்  தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.