சீனாவில் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மருமகள் தாக்கியதில் மாமியாரின் நான்கு விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்தவர் ஷென் என்ற மூதாட்டி. கணவரை இழந்த இவர், வெவ்வேறு நகரங்களில் வேலை பார்த்து வரும் தனது மகன் சியாவோ மற்றும் மருமகளின் இரண்டு குழந்தைகளைப் பராமரித்து வந்தார். இந்நிலையில், ஒரு குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மூலமாகத் தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பதை அறிந்த தாய், பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மருமகள், குழந்தையைச் சரியாகப் பராமரிக்காதது குறித்து மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மாமியார் ஷென், “குழந்தையைப் பராமரிப்பதை விட நான் இறப்பதே மேல், நான் எனது காதலனைச் சந்திக்கச் செல்ல வேண்டும்” எனக் கூறி மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மருமகள், தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அந்த மூதாட்டியின் 4 விலா எலும்புகள் உடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் மாமியாரின் மகள்கள் தங்களது தாய்க்கு ஆதரவாக நின்ற நிலையில், சொந்த மகனோ பெத்த தாயைக் காப்பற்றாமல் தனது மனைவியின் வன்முறைச் செயலை நியாயப்படுத்தியுள்ளார். “குடும்பம் பணக் கஷ்டத்தில் இருந்த போது என் தாய் எங்களுக்கு உதவவில்லை, எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் தான்” என மகன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாகத் துப்புரவுப் பணியாளராக உழைத்த தங்களது தாய்க்கு, வயதான காலத்தில் தனக்கான துணையைத் தேடிக் கொள்ளவும், சொந்த வாழ்க்கையை வாழவும் முழு உரிமை உண்டு என மூதாட்டியின் மகள்கள் தங்களது சகோதரனுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சீன சமூக வலைதளங்களில் தற்சமயம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
