சீன நாட்டில் தற்போது பெண்களின் எண்ணிக்கை மிகக் கடுமையான அளவில் குறைந்து வரும் நிலையில், அங்குள்ள இளைஞர்கள் திருமணத்திற்காக வெளிநாட்டுப் பெண்களைத் தேடி அலைந்து ஏமாறும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சீனாவில் திருமண வயதை எட்டிய பெண்களின் எண்ணிக்கையை விட, ஆண்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடி அதிகமாக உள்ளது. இந்த பெரும் இடைவெளி காரணமாக, சீன ஆண்கள் தங்களுக்கு மனைவிகளைக் கண்டறிவதில் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும்  இளைஞர்கள், ஏழை நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களை, குறிப்பாக வங்காளதேசத்து இளம் பெண்களைத் திருமணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகச் சீன ஆண்கள் ஒரு தகுதியான மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக இடைத்தரகர்களிடம் தங்களது உழைப்பின் மூலம் ஈட்டிய ஆயிரக்கணக்கான யுவான் பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை. ஆனால், இந்தத் தேடல் அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்திலேயே முடிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் மணப்பெண்கள், சீன ஆண்களிடம் இருந்து பெருமளவிலான பணத்தைப் பெற்றுக்கொண்டு, சில நாட்களிலேயே திடீரென ஓட்டம்பிடித்து விடுகின்றனர். இதனால் பெருந்தொகையை இழந்து, மனைவியும் இல்லாமல் சீன ஆண்கள் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எல்லை தாண்டிய திருமண மோசடிகள் சீனாவில் தற்போது ஒரு தொடர்கதையாக மாறி ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கி வருகிறது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதைத் தொடர்ந்து, சீனத் தூதரகம் தற்போது ஒரு அவசர எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய திருமண மோசடிகள் மற்றும் சர்வதேச ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராகச் சீன மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பியோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான நபர்களின் அடிப்படையிலோ சட்டவிரோதத் திருமணங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், வங்காளதேச பெண்களின் அழகில் மயங்கி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது உள்ளூர் சட்டங்களை மீறுவதற்கு வழிவகுக்கும் என்றும் தூதரகம் கடுமையாக எச்சரித்துள்ளது.