மகாராஷ்டிர மாநிலம் புனேயில், ஒரு குடும்பத் தகராறு மிக பயங்கரமான வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி மதியம் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை அடித்துத் துன்புறுத்தியது குறித்து நியாயம் கேட்க வந்த 60 வயது மாமியாரை, மருமகள் தனது தோழிகளுடன் சேர்ந்து கத்தியால் குத்தினார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட மருமகள் ரூபாலி மனோஜ் தோத்ரே, ஆரம்பத்தில் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, கணவரை கொடூரமாகத் தாக்கியது மட்டுமன்றி, யாரும் எதிர்பாராத விதமாக அவரது கண்களில் மிளகாய்பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளார். கணவர் மீது நடத்தப்பட்ட இந்த அநீதி குறித்து தகவல் அறிந்ததும், அவரது 60 வயது வயதான தாய், பதறியடித்துக் கொண்டு உடனடியாக புனேவிற்கு விரைந்து வந்துள்ளார்.
தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மருமகள் ரூபாலியிடம் நியாயம் கேட்க அந்த வயதான தாய் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், மாமியார் தன்னிடம் வந்து கேள்வி கேட்பதை மருமகள் ரூபாலியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரூபாலி மற்றும் அவரது தோழிகளான வைஜெயந்தா அனில் ஜாதவ், பூஜா விஜய் ஜாதவ் ஆகிய மூவரும் சேர்ந்து அந்த மூதாட்டியை சூழ்ந்துகொண்டு கால்களாலும் கைகளாலும் பயங்கரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். தகராறு எல்லை மீறிப் போனதைத் தொடர்ந்து, ரூபாலி வீட்டிற்குள் சென்று ஒரு கூர்மையான கத்தியை எடுத்து வந்து, தனது மாமியாரின் கைகளில் சராமரியாகக் குத்தியுள்ளார்.
மாமியார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிறகும், அந்தப் பெண்களின் கொடூரம் அடங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அந்த முதியவரைத் தாக்கி வந்துள்ளனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறிய இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஒட்டுமொத்தமாக உறைந்து போயினர். இதையடுத்து, பலத்த காயமடைந்த மாமியார் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முண்டவா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாமியார் அளித்த புகாரின் பேரில், மருமகள் ரூபாலி உள்பட மூன்று பெண்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
