உலக அரங்கில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறமையால் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் ரசிகர்களால் உற்றுநோக்கப்படுகிறது. ஆனால், வரலாற்றில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் தங்களது தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் போதைப்பொருள் மோகத்தால் தங்களது பொன்னான வாழ்க்கையையும், கிரிக்கெட் எதிர்காலத்தையும் மொத்தமாக இழந்துள்ளனர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற வீரரான சர் எவர்டன் வீக்ஸின் மகன் டேவிட் முர்ரே ஆவார். 1970 மற்றும் 80-களில் திறமையான விக்கெட் கீப்பராக வலம் வந்த இவர், தனது 12 வயதிலேயே சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி, பின்னர் கஞ்சா, கொக்கைன் எனப் போதைப்பாதையில் மூழ்கி தனது இடத்தை இழந்தார். பின்னாட்களில் வறுமையின் பிடியில் சிக்கிய இவர், பார்படாஸ் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்குப் போதைப்பொருள் விற்றுப் பிழைப்பு நடத்திய அவலம் கிரிக்கெட் உலகையே உலுக்கியது.

இவரைப் போன்றே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்  கடுமையான விதிகளை மீறிப் போதைப்பொருள் பயன்பாட்டிற்காகப் பல்வேறு காலகட்டங்களில் பல முன்னணி வீரர்களும் தடையைச் சந்தித்துள்ளனர். இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் இயன் போத்தம் 1986-ல் கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 63 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், 1994-ல் நியூசிலாந்தின் இளம் வீரர்களான ஸ்டீபன் பிளெமிங், தியோன் நாஷ் மற்றும் மேத்யூ ஹார்ட் ஆகியோர் பார்பிக்யூ பார்ட்டியில் கஞ்சா புகைத்ததற்காகத் தடை செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எட் கிடின்ஸ் 1996-ல் கொக்கைன் பயன்படுத்தியதற்காக 18 மாதங்கள் தடை செய்யப்பட்டார். மேலும், 2001-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷல் கிப்ஸ், ஆண்ட்ரே நெல் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் கஞ்சா புகைத்ததற்காக அபராதமும் கண்டனமும் பெற்றனர்.

பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த போதைப்பொருள் சர்ச்சைகளில் சிக்கித் தப்பவில்லை. 1993-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேத் மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி கிரெனடா போலீசாரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், 2006-ல் இந்தியாவிற்கு சாம்பியன்ஸ் டிராபி விளையாட வந்த சோயப் அக்தர் மற்றும் முகமது ஆசிப் ஆகிய இருவரின் ரத்த மாதிரிகளில் ‘நண்ட்ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பது கண்டறியப்பட்டு, முறையே இரண்டு மற்றும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதேபோல், 2007ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மணீந்தர் சிங் 1.5 கிராம் கொக்கைன் வைத்திருந்த குற்றத்திற்காக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விளையாட்டு உலகில் மாபெரும் ஜாம்பவான்களாகக் கருதப்பட்ட வீரர்களும் இத்தகைய சோதனைகளில் சிக்கித் தங்களது நற்பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளனர். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, உடல் எடையைக் குறைப்பதற்காகத் தனது தாயார் கொடுத்த மாத்திரையை உட்கொண்டதாகக் கூறினார். ஆனால், அது தடை செய்யப்பட்ட சிறுநீர் பெருக்கி மருந்து என நிரூபணமானதால் அவர் உலகக்கோப்பையில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டார்.

இதேபோல், இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் டெர்மாட் ரீவ், போதைப்பொருள் உட்கொண்ட நிலையிலேயே மைதானத்தில் நேரடி வர்ணனை செய்ததை ஒப்புக் கொண்டதால் தனது வேலையை இழந்தார். முகமது ஆசிப் 2008-ல் துபாய் விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் துகள் வைத்திருந்ததற்காக 19 நாட்கள் சிறை வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். இத்தகைய சம்பவங்கள், போதைப்பாதை ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கும் என்பதற்குச் சான்றுகளாக விளங்குகின்றன.