தன் சொந்தத் தவறை மறைத்துக்கொண்டு, கணவர் மீது வீண் பழி சுமத்தி யாரும் விவாகரத்து பெற முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரைப் பிரிந்துசென்று வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் விவாகரத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் ஜி.எஸ். அலுவாலியா மற்றும் அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணமான தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவி நீதிமன்றத்தை நாடினார். தன் கணவர் மது குடித்துவிட்டு தன்னை சித்திரவதை செய்வதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார். மேலும், தன்னை வீட்டை விட்டு விரட்டியடித்ததாகவும், அதனால் மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும் கூறி விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், கணவர் தரப்போ, மனைவி தன் நகைகளுடன் வீட்டை விட்டு தானாகவே ஓடிவிட்டதாகவும், அவரைக் காணவில்லை என்று தான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் கூறி, தங்களை மீண்டும் சேர்த்து வைக்கக் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனைவி கூறிய வரதட்சணை மற்றும் குடும்ப வன்கொடுமை புகார்கள் அனைத்தும் வெறும் வெற்றுப் புகார்களே தவிர, அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும், ஒரு குற்றவழக்கின் பின்னணியை ஆராய்ந்தபோது, அந்தப் பெண் தன் கணவரைப் பிரிந்து சென்ற காலத்தில், வேறொரு நபருடன் அவராகவே சம்மதித்து உடலுறவு கொண்டு கள்ளத்தொடர்பில் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்து திருமணச் சட்டத்தின் படி, ஒரு நபர் தான் செய்த தவற்றை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தில் நிவாரணம் தேட முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். தானாகவே குடும்பத்தை விட்டு வெளியேறி, கள்ளக்காதலில் ஈடுபட்டுவிட்டு, கணவர் மீது பழிபோடும் பெண்ணுக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று கூறி, குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.