உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால் நிலைதடுமாறி விழுந்த தந்தை மற்றும் மகன் மீது, எதிரே வந்த மற்றொரு கார் ஏறிய கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த தொடர் விபத்தின் முழு வீடியோவும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி மாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. காயாசி லால் என்பவர் தனது 70 வயது தந்தை பாபுலாலை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரைக் கடக்க முயன்றபோது, காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல், திடீரென காரின் கதவைத் திறந்துள்ளார்.
झांसी: गुरसराय में सड़क हादसे में पिता-पुत्र गंभीर रूप से घायल
सड़क किनारे खड़ी कार का अचानक गेट खुलने से बाइक टकराई
इसी दौरान सामने से आ रही दूसरी कार ने भी मारी टक्कर
हादसे में दोनों घायलों को आए गंभीर फ्रैक्चर, मेडिकल कॉलेज झांसी रेफर
पीड़ित पक्ष ने दो वाहन चालकों के खिलाफ… pic.twitter.com/qdXz4cwgo5
— Bharat State|भारत स्टेट (@bharat_state) July 16, 2026
இதில் எதிர்பாராத விதமாக காரின் கதவு மீது மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் தந்தை, மகன் இருவருமே தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே விழுந்தனர். அவர்கள் எழுவதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு கார், சாலையில் விழுந்து கிடந்த தந்தை மற்றும் மகன் மீது மிகக் கொடூரமாக ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 70 வயது முதியவர் பாபுலாலின் மார்பு எலும்புகள் முறிந்ததுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மகன் காயாசி லாலின் மார்பு மற்றும் தாடை எலும்புகள் உடைந்தன.
விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்ட பொதுமக்களும் போலீஸாரும், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். எனினும், இருவரின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், விபத்துக்குக் காரணமான இரண்டு கார்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
