கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடும்பத் தகராறு காரணமாக 4 மாத கர்ப்பிணியான தனது மனைவியை நாய் கட்டும் சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே சங்கிலியால் கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பயங்கரச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் 30 வயது மனோஜ் என்ற தச்சுத் தொழிலாளி, தனது மனைவி ஸ்வப்னாவுடன் வசித்து வந்தார். இவர்களது குடும்பம் பூர்வீகமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், மனோஜ் பெங்களூருவிலேயே பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். தற்போது ஸ்வப்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மனோஜ் மற்றும் ஸ்வப்னா தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மனோஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மதியம் அவர்களது படுக்கையறைக்குள் மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மனோஜ், வீட்டில் இருந்த நாய் கட்டும் சங்கிலியை எடுத்து, கர்ப்பிணியான தன் மனைவி ஸ்வப்னாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மனைவி இறந்ததை உணர்ந்த மனோஜ், பயத்தில் அதே நாய் சங்கிலியைப் பயன்படுத்தி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பூட்டியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனோஜ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபரீத முடிவிற்கான துல்லியமான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
