உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நொய்டா மமுரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில், நேற்று சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் மின்சார வாகனம் திடீரென மின்கசிவு காரணமாக வெடித்துச் சிதறியது. அடுத்த சில நொடிகளிலேயே தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிற வாகனங்களுக்கும் தீ மளமளவெனப் பரவி, தரைத்தளம் முழுவதும் நெருப்பு வளையமாக மாறியது. இதனால் ஏற்பட்ட அடர்ந்த நச்சுப் புகை, நிமிடங்களில் மேல் தளங்கள் முழுவதும் பரவி அந்தப் பகுதியையே போர்க்களமாக மாற்றியது.
கட்டிடத்தின் மேல் தளங்களில் தனியார் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததால், அங்கிருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமல் தவித்தனர். உயிருக்கு அஞ்சிய பலரும் மொட்டை மாடிக்கு ஓடி, அங்கிருந்து அக்கம் பக்கத்து கட்டிடங்களுக்குத் தாவித் தப்பினர். அப்போது, அருகில் நடந்து வந்த ஒரு கட்டிடக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தங்களின் பெரிய ஏணியை இந்த மொட்டை மாடிக்கு நீட்டிப் பலரைக் காப்பாற்றினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மூலமும், ஜன்னல்களை உடைத்தும் 100-க்கும் மேற்பட்டோரை அதிரடியாக மீட்டனர். இருப்பினும், நச்சுப் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்து நிகழ்ந்த 5 மாடி கட்டிடம் முற்றிலும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டிடத்தை முறையாகப் பராமரிக்காதது மற்றும் விதிகளை மீறி குறுகிய இடத்தில் பிஜி தங்குமிடம் நடத்தியது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து விடுதி நடத்தி வந்த நபர் ஆகிய இருவர் மீதும் அலட்சியமாகச் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த இந்தக் கட்டிடத்தில், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையாலும், அக்கம் பக்கத்தினரின் மனிதநேய உதவியாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும்போது நிலவும் அலட்சியமும், விதிமீறல் கட்டிடங்களும் எப்படிப்பட்ட பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
