பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனி கோயில் நில விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு அறநிலையத்துறை அமைச்சர் தீவிரமாக முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிலப் பதிவில் சட்டவிதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பழனிக்கு அருகாமையில் உள்ள சார் பதிவாளரை முறைப்படி அழைக்காமல், சுமார் 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு சார் பதிவாளரை வரவழைத்து இந்த முறைகேடான பத்திரப்பதிவை நடத்தியுள்ளனர் என்று மிக முக்கியமான குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
தொடர்ந்து தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய பரந்தாமன், “பொதுவாகப் பொதுமக்கள் பழனிக்கு வந்துதான் மொட்டை போடுவார்கள். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் பழனிக்கே மொட்டை போடப்பட்டுள்ளது” என்று சாடினார். மேலும், இந்த முறைகேடான நிலப்பதிவைக் கூட தவெக அரசு தானாக முன்வந்து ரத்து செய்யவில்லை என்றும், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டதன் காரணமாகவே அந்த நிலப்பதிவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் முறைகேடுகளைத் தடுப்பதில் அரசின் மெத்தனப்போக்கு வெளிப்பட்டுள்தாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக, இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்வி எழுப்பிய அவர், கோயில் நில முறைகேடு தொடர்பாகச் சமூக வலைதளங்களில் விமர்சித்துத் தங்களது கருத்துகளைப் பேசியவர்களை மட்டும் இரவோடு இரவாகக் காவல் துறையினர் மிகத் தீவிரமாகக் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார். ஆனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்றவர்களையும், அதனை வாங்கிய பினாமி நபர்களையும் இதுவரை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, உண்மையான குற்றவாளிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
