இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கடந்த சில மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் விண்வெளித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல் திருட்டு மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ராஜினாமாக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் மிகவும் விநோதமான முறையில் பதிலளித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்தவொரு முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களும் திருடப்படவில்லை என்று இந்திய அணுசக்தி கழகம் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ராஜினாமா விவகாரத்தில் மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார். குறிப்பாக, இந்தியாவின் மிக முக்கிய விண்வெளித் திட்டமான ‘ககன்யான்’ போன்ற அதிமுக்கிய மற்றும் உணர்வுபூர்வமான திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், விருப்ப ஓய்வு பெறுவது மற்றும் வேலையை விட்டு விலகுவது போன்ற விதிகளில் மத்திய அரசு சில கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமாக்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், “விஞ்ஞானிகள் வெளியேறுவதற்கு வேறு எந்த ஒரு விசேஷக் காரணமும் இல்லை, இது முற்றிலும் நிர்வாக ரீதியானது மட்டுமே. இஸ்ரோ என்பது மிகப்பெரிய பணியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. இங்குப் பணியாளர்கள் வேலையை விட்டுப் போவதும், புதியவர்கள் உள்ளே வருவதும் இயல்பான ஒன்றுதான். பல பேர் சென்றுள்ளனர், பல பேர் வந்துள்ளனர்” என்று கூறி, இதில் எந்தவித சர்ச்சையும் இல்லை எனத் தட்டிக்கழித்தார். மேலும், விண்வெளித் திட்டங்களில் முன்னாள் மற்றும் ஓய்வுபெற்ற விஞ்ஞானிகளின் பங்களிப்பும் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் எஸ். சோமநாத் அவர்களுடன் ஒரு கூட்டத்தில் நான் பேசியபோது, மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது எளிது, ஆனால் அவனைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வருவதுதான் கடினம் என்று அவர் கூறியிருந்தார். சோமநாத் இப்போது இஸ்ரோவில் இல்லை. அதற்காகக் ககன்யான் திட்டம் நின்றுவிட்டது என்று அர்த்தமல்ல, இஸ்ரோவின் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருகின்றன” என்றார். கடந்த ஜனவரி 2025 வரை இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றி, சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை வழிநடத்திய டாக்டர் எஸ். சோமநாத், தற்போது சென்னையில் உள்ள ‘அக்னிகுல் காஸ்மாஸ்’ என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பார்வையாளராகப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.