கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வந்த கிரண் ஹொன்னண்ணவர் என்ற மருத்துவரை, அவரது மனைவியான கண் மருத்துவர் பிரியா என்பவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தம்பதியினருக்கு 10 வயதான நிதிக் உள்பட மூன்று மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று மாலை நேரத்தில், கிரணின் உறவினர்கள் அவருக்குப் பலமுறை செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்காததால், சந்தேகமடைந்து அவரது மனைவி பிரியாவைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு பிரியா, தனது கணவர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். எனினும், அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே நீண்ட நேரமாக போனை எடுக்காததால் பதற்றமடைந்த உறவினர்கள், நேரடியாக அவர்களது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்த பயங்கரக் காட்சியைக் கண்டு உறைந்து போயினர்.
அங்கு வீட்டின் ஒரு அறையில் டாக்டர் கிரண் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். மற்றொரு படுக்கையறையில் 10 வயது மகன் நிதிக் கத்திக் குத்துப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளான். ஆனால், இவை எதைப் பற்றியுமே கவலைப்படாமல், அவனது பக்கத்திலேயே படுத்துக் கொண்டு தாய் பிரியா மிகவும் சாதாரணமாகத் தனது செல்போனைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் பிரியாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, முதலில் அவர் குற்றத்தை மறுத்துள்ளார். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் தான் கணவரைக் கொடூரமாகக் கொலை செய்ததாகவும், பெற்ற மகனைக் கத்தியால் குத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். படித்த ஒரு பெண் மருத்துவரா இப்படிச் செய்தார் என்று போலீசார் விசாரித்தபோது, அவர் எதற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என்ற விபரம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், பிரியா மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கணவனின் பிணம் ஒருபுறம் கிடக்க, மகன் உயிருக்கு போராடும் நிலையில், ஒரு மருத்துவரான பிரியா எவ்வித பதற்றமும் இன்றி செல்போன் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
