மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது வருங்கால மனைவி சியா கோயலின் தந்தை பிரவீன் கோயல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது கள்ளக்காதலன் சௌத்ரி ஆகியோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ள சியாவின் தந்தை பிரவீன் கோயல், “இந்தக் கொலையில் என் சொந்த மகளே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கேதனை எந்தக் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கொன்றார்களோ, அதே கோட்டையிலிருந்து அவளையும் கீழே தள்ளி கொன்றுவிடுங்கள்” என ஆவேசமாகவும் கண்ணீருடனும் தெரிவித்துள்ளார்.

 

வருங்கால மருமகன் கேதனைத் தனது சொந்த மகனைப் போல நேசித்ததாகக் குறிப்பிட்ட பிரவீன் கோயல், அவனது இழப்பு தங்களுக்குப் பேரிழப்பு என்று கதறியுள்ளார். மேலும், 19 வயதே ஆன தனது மகள் சியாவுக்கு இப்படி ஒரு கள்ளக்காதல் பின்னணி இருந்தது தமக்குத் தெரியாது என்றும், அந்த கள்ளக்காதலன் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ள அவர், கேதன் அகர்வால் குடும்பத்தினர் மிகவும் பண்பானவர்கள் என்றும், இந்தத் துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கில் சியா மற்றும் அவரது கள்ளக்காதலன் எதற்காக, எப்படி இந்தக் கொலையைச் செய்தார்கள் என்பது குறித்து புனே போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.