மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில் அரங்கேறியுள்ள ஆபாச வீடியோ விவகாரம், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதன் பின்னணியில் பெரிய அளவிலான சதி  இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுமார் 180 பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அயான் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது உஜேர் கான் இக்பால் கான் என்ற மற்றொரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அயான் அகமதுவின் கைப்பேசியில் இருந்த ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் பரப்பியது உஜேர் கான் தான் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முக்கிய குற்றவாளி அயான் அகமதுவின் கைப்பேசியிலிருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வீடியோக்களில் உள்ள பெண்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 இளம்பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியம் கருதி, பெண் போலீஸார் மூலம் இந்த விசாரணை மிகவும் கவனமாக நடத்தப்பட்டு வருகிறது.

குற்றவாளிகள் தங்கள் கைப்பேசியிலிருந்து சில முக்கியத் தரவுகளை அழித்துள்ளனர். அவற்றைச் சைபர் க்ரைம் போலீஸார் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வீடியோக்கள் வேறு யாருக்கெல்லாம் பகிரப்பட்டது, இதற்குப் பின்னால் ஏதேனும் பெரிய கும்பல் செயல்படுகிறதா என்பது தெரியவரும்.

இந்தச் சம்பவம் மகாராஷ்டிர அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குற்றவாளிக்கு அரசியல் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட கட்சி அந்த நபர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாகப் பரத்வாடா போலீஸார் கூறியதாவது: “பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அச்சமுமின்றி வந்து புகார் அளிக்கலாம். அவர்களின் அடையாளம் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்; அது சட்டப்படி குற்றமாகும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.