ஜிம்முக்கு வந்த திருமணமான பெண்ணை வலையில் வீழ்த்தி, அவரது அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாகக் கூறி கணவரிடம் பணம் பறிக்க முயன்ற 50 வயது ஜிம் பயிற்சியாளரைச் சூரத் சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது சூரத் நகரின் ‘சிட்டி லைட்’ பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் வந்துள்ளார். அங்கு அவருக்குப் பயிற்சியாளராக இருந்த ஷபீர் ட்ரங்க்வாலா (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷபீருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்தப் பெண்ணை ஆசை வார்த்தை கூறித் தனது வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஷபீர் சென்றபோது, அவரது கணவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தனது மனைவியை விட்டு விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளார். ஆனால், ஷபீர் அந்தப் பெண்ணின் அந்தரங்கப் படங்களை இணையதளங்களில் வைரலாக்கி விடுவேன் எனக் கூறி, கணவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடாஜன் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே, அந்தப் பெண்ணின் கணவரைச் சந்தித்த ஷபீர், உடைந்த கண்ணாடித் துண்டை அவரது கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். உயிருக்கு அஞ்சிய அந்தத் தொழிலதிபர், அப்போது முதற்கட்டமாக ரூ.50,000 பணத்தைச் ஷபீரிடம் கொடுத்துள்ளார்.
தொடர் மிரட்டல்களால் மனமுடைந்த அந்தத் தொழிலதிபர், தனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் சூரத் சிறப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஷபீர் ட்ரங்க்வாலாவைக் கைது செய்தனர். அவர் மீது மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துத் துணை ஆணையர் ராஜ் தீப் நகும் கூறுகையில், “ஜிம் பயிற்சியாளர்கள் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றுவதாகப் புகார்கள் வந்ததையடுத்து, கடந்த மார்ச் 9-ம் தேதி ஜிம் உரிமையாளர்களை அழைத்து எச்சரித்தோம். அதையும் மீறி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதேபோல வேறு பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
