மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் பணியாற்றும் வங்காளத் தொழிலாளர்கள் தனக்கு வாக்களிக்காவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் ஊடுருவல்காரர்கள் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை முன்வைத்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் மற்றும் வெளிமாநிலங்களில் வங்காளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பவானிப்பூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவின் சுவேந்து அதிகாரி, நந்திகிராமில் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது. நந்திகிராம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சுவேந்து அதிகாரி தெரிவித்ததாவது,
“நீங்கள் அனைவரும் குஜராத், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பணிபுரிகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். குஜராத்தில் மட்டும் 30,000 வங்காளத் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 1,100 பேர் நந்திகிராம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேபோல் ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவிலும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
அங்குள்ள ‘இரட்டை எஞ்சின்’ அரசுகளால்தான் உங்களுக்கு அமைதியான வேலை கிடைக்கிறது. மே 4-ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க விரும்பவில்லை என்றால், இந்தத் தேர்தலில் தவறு செய்யாதீர்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள். நீங்கள் ‘ஜெய் பங்களா’ என்று முழக்கமிடலாம், ஆனால் நான் அனைத்தையும் குறித்துக் கொள்வேன் என்றார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காகப் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பி வரும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வைத்து சுவேந்து அதிகாரி மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்யும் வங்காளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதியே, அவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பது மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த மிரட்டல் பேச்சு தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க மம்தா தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
