உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா ஓட்டி வந்த லம்போர்கினி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். கான்பூர் பகுதியில் உள்ள விஐபி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் முதலில் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா மீதும், பின்னர் நின்றிருந்த ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.

இதில் பைக்கில் இருந்தவர் சுமார் 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இறுதியாக ஒரு மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. காயமடைந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை முற்றுகையிட்டனர்.

“>

அப்போது தொழிலதிபரின் மகனுடன் வந்த பாதுகாவலர்கள் பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தியவர் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், காவல்துறையினர் அவர் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யத் தாமதிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், ஓட்டுநருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதே விபத்திற்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.