மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சுரங்கத்துறையில் பணியாற்றும் அர்ச்சனா வர்மா (28) என்ற இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே பணயக்கைதியாக பிடித்து வைத்து, கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகன் ஆசிஷ் மற்றும் அவரது 15 வயது உறவினர் சிறுவன் என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் தந்தை வேலைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட இவர்கள், வேலை விஷயமாகப் பேசுவது போல் கதவைத் தட்டி உள்ளே புகுந்துள்ளனர்.

வெறும் 15 நிமிடங்களில் கத்திமுனையில் மிரட்டி, சுமார் 1.68 லட்சம் ரொக்கம் மற்றும் ஆப்பிள் போன் உள்ளிட்ட 3.25 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் மீட்டுள்ளனர்.

விசாரணையில், தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்ததாலும், புதிய பைக் வாங்க ஆசைப்பட்டதாலும் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டதாக ஆசிஷ் ஒப்புக்கொண்டார்.

தனக்கு நன்கு தெரிந்த குடும்பம் என்பதால், அவர்கள் எப்போது வீட்டில் இருப்பார்கள் என்ற தகவலை முன்கூட்டியே தெரிந்து வைத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது விசாரணையில் அம்பலமானது.