வேலூர் அருகே குடும்பப் பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம் காட்டுக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பத்தைச் சேர்ந்த கலையரசி (33) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
நன்கு சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு உணவு முடித்துவிட்டு கலையரசி உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி வரை அவர் எழாததால், கருணாகரன் அவரை எழுப்ப முயன்றபோது உடல் குளிர்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதாகக் கூறி, அவரது தந்தைக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
கலையரசியின் உடலைப் பார்த்த பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் கருணாகரனைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று நாடகமாடிய கருணாகரனிடம், போலீசார் விடிய விடிய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில், ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
வாக்குமூலத்தில் கருணாகரன் கூறியிருப்பதாவது: “மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரைக் கொல்லத் திட்டமிட்டேன். அன்றைய இரவு அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கை மற்றும் கால்களில் மின்சார வயர்களை இணைத்து மின்சாரத்தைப் பாய்ச்சினேன். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக நாடகமாடினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கருணாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மின்சாரம் பாய்ச்சிக் மனைவியைக் கணவனே கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
