நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சி 4-ஆவது வார்டுக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டி பகுதியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த புதன்கிழமை அன்று அந்தப் பகுதியில் பெரிய அளவில் குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழிக்குள் திடீரென நீரூற்று ஏற்பட்டதால், அதில் தண்ணீர் தேங்கியதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு கருதி அந்த குழியைச் சுற்றி கம்புகள் நடப்பட்டு, எச்சரிக்கை துணி கட்டப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை அந்த எச்சரிக்கை துணி அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – ரதிபிரியா தம்பதியரின் 4 வயது மகன் ரோகித், இன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாகச் சிறுவன் அந்தப் பாதாளச் சாக்கடை குழிக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் தேடினர். அப்போது, தண்ணீர் நிரம்பியிருந்த குழிக்குள் சிறுவன் சடலமாக மிதப்பதைக் கண்டு கதறித் துடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழியைச் சுற்றி முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்காமல், வெறும் துணியைக் கட்டி மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டுள்ளனர். இந்த அலட்சியமே ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது” எனச் சிறுவனின் உறவினர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். சமேலும் ம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
