சமீபத்தில் நடந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து ஆர் சி பி அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் நான்காம் தேதி பேரணி நடத்தினர். அதோடு மாநில அரசு, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றதும். இதில் பங்கேற்ற பார்வையாளர்களில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஆர் சி பி அணி, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதோடு கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அண்மையில் அறிக்கையும் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது 11 பேர் உயிரிழப்புக்கு காரணம் ஆர் சி பி அணி நிர்வாகம் தான். காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர் சி பி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது,

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு இந்த வெற்றியை பெங்களூர் மக்களோடு கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டிருந்தார். கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர் சி பி நிர்வாகமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மந்திரி சபை கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் குறித்து நீதிபதி குன்கா விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்பது என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர் சி பி அணி, கர்நாடக மாநிலம் கிரிக்கெட் சங்கம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.