சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது, எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 11 தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியுள்ளதாகவும், அவர் கட்சியை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் என்றும் ஓபிஎஸ் விமர்சித்தார்.

​மேலும், எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் ஒருபோதும் இணையப் போவதில்லை எனத் தீர்மானம் நிறைவேற்றிய அவர், பழனிசாமி இல்லாத அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வைத்திலிங்கத்தின் கருத்தை வழிமொழிந்தார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று குறிப்பிட்ட ஓபிஎஸ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்குத் தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், பழனிசாமி வெற்றி பெறுவார் என்பது வெறும் மாயை என்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.