பிரிட்டனின் மிடில்ஸ்பராவைச் சேர்ந்த டேரன் ஹாரிஸ் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு பழைய இரும்புச் சாமான்களைத் தேடி ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்திற்குள் சென்றபோது, தவறுதலாக 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்த சுவிட்ச் போர்டைத் தொட்டுவிட்டார்.
இந்த பயங்கரமான விபத்தில் மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததால், அவர் 14 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவராகக் கருதப்பட்டார். தீவிர காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் 29 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.
அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து, கை மற்றும் முகத்தின் தசைகள் எலும்பு தெரியும் அளவிற்கு எரிந்து போயிருந்தன. மருத்துவர்கள் மேற்கொண்ட கடினமான போராட்டத்திற்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தாலும், அது அவருக்கு நீண்ட கால இன்னல்களைக் கொடுத்தது.
உயிர் பிழைத்த பிறகு டேரனுக்கு இதுவரை 33-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் அவர் தனது காதுகளையும், மூக்கின் ஒரு பகுதியையும் இழந்துவிட்டார்.
உடல் ரீதியான பாதிப்பு மட்டுமின்றி, கடும் மன உளைச்சல் மற்றும் பி.டி.எஸ்.டி போன்ற பாதிப்புகளாலும் அவர் பல ஆண்டுகள் போராடி வந்தார். இருப்பினும், மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வரும் டேரன், தற்போது தனது முகத்தை மீண்டும் சீரமைக்க அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து வரும் டேரன், துயரத்தில் இருப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் ஒரு அடையாளமாக இன்று மாறி நிற்கிறார்.
