அமெரிக்காவில் குடியேறி பெரும் வெற்றி கண்டுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், தனது தாயாரின் தியாகத்தைப் போற்றிப் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த போது, அவரது தாயார் அங்கு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ‘பேபிசிட்டர்’ வேலையைச் செய்துள்ளார்.

இந்நிலையில் மிகக் குறைந்த ஊதியத்திலும் மிகுந்த சிக்கனத்துடன் வாழ்ந்த அவர், தனது கடின உழைப்பின் மூலம் 10,000 டாலர்களைச் சேமித்துள்ளார். அந்தப் பெரும் தொகையைத் தனது மகனின் முதல் வீட்டைக் வாங்குவதற்காக அவர் வழங்கியது, ஒரு தாயின் தன்னலமற்ற அன்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் 10,000 டாலர் என்பது சாதாரணத் தொகையாகத் தெரிந்தாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு மிகப்பெரிய முதலீடாகும். அந்நிய மண்ணில் மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி, ஒரு சாதாரண வேலையைச் செய்து தனது பிள்ளையின் எதிர்காலத்திற்காக அவர் சேர்த்த ஒவ்வொரு டாலரும் இன்று ஒரு வெற்றிகரமான மருத்துவராகத் திகழும் அவரது மகனுக்குப் பெரும் உந்துதலாக இருக்கிறது.

மேலும் “அம்மா இல்லையென்றால் என்னால் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது” என அந்த மருத்துவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் தாய்மார்களின் உழைப்பை இந்தச் சம்பவம் மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.