துபாயில் சமீபத்தில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில், காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு ‘உலகின் சிறந்த ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது.
லண்டனின் வர்கி அறக்கட்டளை மற்றும் யுனெஸ்கோ இணைந்து வழங்கிய இந்த விருதோடு, சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது.
ஓவியக் கலைஞர் மற்றும் சமூக சேவகரான இவர், இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை உருவாக்கி, புதுமையான முறையில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருவதைப் பாராட்டி இந்த உயரிய கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரூபிள் நாகி, பரிசுத் தொகையைக் கொண்டு காஷ்மீரில் புதிய பள்ளி ஒன்றைக் கட்டப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு ஏழை எளிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயிற்சிகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓவியக் கண்காட்சி நடத்திய பெருமைக்குரிய இவர், இந்த விருதை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறார்.
