துபாயில் வசிக்கும் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்ற இந்தியப் பெண் காமினி கண்ணன், தவறுதலாக சுமார் 12.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய பையை குப்பையில் வீசிவிட்டார்.
பிப்ரவரி 1-ம் தேதி இந்தத் தவறு நடந்ததை உணர்ந்த குடும்பத்தினர், குப்பை லாரி சென்ற பிறகு நகை இனி கிடைக்காது என்ற நம்பிக்கையில் போலீசில் கூட புகார் அளிக்காமல் வேதனையில் இருந்தனர்.
ஆனால், துபாய் கழிவு மேலாண்மைத் துறையின் நவீன கண்காணிப்பு முறையாலும், நேர்மையான ஒரு ஊழியராலும் இந்தச் சம்பவம் வியக்கத்தக்க திருப்பத்தைச் சந்தித்தது.
குப்பையில் நகையைக் கண்டெடுத்த ஊழியர் அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்க, துபாய் போலீசார் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த குப்பைப்பை எந்தக் கட்டிடத்தில் இருந்து வந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு காமினியின் மகனைத் தேடி வந்த போலீசார், உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்த பின் அந்த நகைகளை அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
துபாய் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையும், அங்கிருக்கும் பாதுகாப்பு கட்டமைப்பும் காமினியின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
