ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கிய தொழிலாளர்கள் பலர் 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த ஆலை உரிய அனுமதியுடன் இயங்கியதா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்துத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய அவர், பட்டாசு ஆலைகளிலும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

ஃதமிழகத்தில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால், எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு ஆலைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் எரிவாயு நிலையங்களில் மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்புத் தணிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.