இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்தச் புகழ்பெற்ற நிறுவனத்திற்குப் பங்களிப்பதற்கான ஆழமான திருப்திகரமான வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த ஒரு தசாப்தமாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த மாபெரும் கவுரவமும் பொறுப்புமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி வரை உள்ளபோதிலும், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் அப்பதிவிற்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். பங்குதாரர்களுடன் நிலவி வரும் மோதல்கள் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோவல் டாடாவுக்கும் சந்திரசேகரனுக்கும் இடையே உள்ள கொள்கை மோதல்களின் காரணமாகவே இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, வாரிய பிரதிநிதித்துவம், குழுவின் வியூகம் மற்றும் சிறுபங்கான ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் டாடா சன்ஸுக்கும் டாடா டிரஸ்ட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. குறிப்பாக, சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க நோவல் டாடா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர் சந்திரசேகரனின் இந்த திடீர் விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, டிசிஎஸ் (TCS), டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட முக்கிய டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. காலை 11:30 மணி நிலவரப்படி, டாடா பவர் பங்கு 1.26 சதவீதமும், டிசிஎஸ் 3.9 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.83 சதவீதமும் சரிவைக் சந்தித்து வர்த்தகமாகி வருகின்றன.

என்.சந்திரசேகரன் கடந்த 1987-ஆம் ஆண்டில் டாடா குழுமத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2009-ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) உயர்ந்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.