சமூக வலைதளங்களில் லைக்ஸும் வியூஸும் அள்ளுவதற்காக மனிதர்கள் எத்தகைய கீழ்த்தரமான செயல்களுக்கும் இறங்குவார்கள் என்பதற்கு ஒரு பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவைக் காணும் எந்தவொரு மனிதரின் ரத்தமும் கொதித்தெழும் வகையில், பெண் ஒருவர் சிறு நாய்க்குட்டியின் உணர்ச்சிகளுடன் விளையாடியுள்ள கொடூரம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு மலை விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பெண் ஒருவர், தனது கையில் ஒரு சிறிய நாய்க்குட்டியைக் வைத்திருக்கிறார். அந்த குட்டியை  மலையிலிருந்து கீழே தூக்கி எறிவது போல அவர் மீண்டும் மீண்டும் நாடகமாடுகிறார். உண்மையில் அவர் அந்த நாய்க்குட்டியை கீழே வீசவில்லை என்றாலும், அவரது இந்த குரூரமான கேலி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த விபரீத பிராங்கின் மிக வலி நிறைந்த தருணம், அதனைப் பார்த்த தாய் நாயின்  தவிப்புதான். தனது செல்லக்குட்டி சாவுக் குழியில் தள்ளப்பட்டுவிட்டதாக நினைத்து பதறிப்போன அந்த பெண் நாய், பயத்தாலும் பதற்றத்தாலும் தலைதெறிக்க மலையின் சரிவிலிருந்து கீழே ஓடியது. புதர்களுக்கு இடையே தனது குழந்தையை தேடிய அந்தத் தாயின் கண்களில் இருந்த பயமும் பரிதவிப்பும், அது அடைந்த மனவேதனையை சொல்ல முடியாது.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் செயலை மிகவும் கொடூரமானதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் சாடி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு பயனர், “பேசத் தெரியாத வாயில்லா ஜீவன்களின் வேதனையைக் கொண்டு கேலி செய்யும் மனிதர்களின் விகாரமான மனநிலையை இது காட்டுகிறது. இவர்களால் மனிதர்கள் மீதும் கருணை காட்ட முடியாது” என்று ஆவேசமாக எழுதியுள்ளார். மற்றொருவரோ, “பொழுதுபோக்கு என்ற பெயரில் விலங்குகளுக்கு மன உளைச்சல் தரும் அளவிற்கு மனிதநேயம் இன்று எவ்வளவு கீழே போய்விட்டது என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.