டெல்லியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவர், குருகிராம் செக்டார் 45-ல் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் தங்கியிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வரும் மார்ச் 12-ம் தேதி இவரது மகனுக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் வீரியம் மிக்க பாலுணர்வு ஊக்க மருந்துகளின் காலி உறைகளை போலீஸார் கண்டெடுத்ததால், அதிகப்படியான மருந்து நுகர்வால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் மாரடைப்பால் இயற்கையான முறையிலேயே உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கப்படாததால் மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதுபோன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி எடுப்பது இதயத்திற்குப் பெரும் அழுத்தத்தைத் தரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
