ஒடிசா மாநிலத்தில் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் தவறுதலாக நுழைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளை, கடத்தல்காரர்கள் எனத் தவறாகக் கருதி கிராம மக்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அதிகாரிகளின் வாகனங்கள் சேதமடைந்ததுடன், அவர்களும் பலத்த காயமடைந்தனர். சட்டவிரோத கும்பலைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகள், தகுந்த முன்னறிவிப்பு அல்லது உள்ளூர் காவல்துறையின் துணையின்றி சென்றதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், தற்போது வரை 72 பேரை கைது செய்துள்ளனர். வதந்திகளால் தூண்டப்பட்ட இத்தகையத் தாக்குதல்கள் பொதுமக்களிடையே சட்ட ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் புலனாய்வு அதிகாரிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.