கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியில், தெருநாய் கடித்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அலைனா லோகா (10) என்ற சிறுமியை, அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது.

இதில் சிறுமியின் முகம், கழுத்து மற்றும் கண் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், நாயை விரட்டிவிட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும் முதலில் பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் மேல் சிகிச்சைக்காக உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தல் ஒரு பிஞ்சுயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.