ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 10 நாள்கள் தங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரின் புகழ்பெற்ற ஹோட்டலில் ஆகஸ்ட் 14 முதல் 23-ஆம் தேதி வரை குடும்பத்தினர் தங்கியதாக கூறப்படுகிறது. தங்கியிருந்த காலத்தில் ஹோட்டல் அறை மட்டுமின்றி உணவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கான மொத்த கட்டணம் ரூ.5.74 லட்சமாக உயர்ந்துள்ளது. விடுமுறையை முடித்துக்கொண்டு வெளியேறும்போதுதான் இந்தப் பணம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்துக்கான ஹோட்டல் முன்பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதி டிராவல் ஏஜென்சி சார்பில் மின்னஞ்சல் மூலம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியுள்ளனர். சுமார் 10 நாள்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், மதிய உணவு, இரவு உணவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களும் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முடிவில் ரூ.5.74 லட்சம் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியேறும்போது, இந்தத் தொகையை தான் செலுத்தப் போவதில்லை என்றும், டிராவல் ஏஜென்சிதான் கட்டணத்தை செலுத்தும் என்றும் அந்த நபர் தெரிவித்ததாக ஹோட்டல் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட டிராவல் ஏஜென்சியை தொடர்புகொண்டு கட்டணம் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கட்டணத்தை செலுத்தும் பொறுப்பு தங்களுக்கு இல்லை என டிராவல் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், உதய்பூரில் உள்ள அம்பாமாதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில், டிராவல் ஏஜென்சியுடன் இணைந்து மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் யாருடைய பங்கு என்ன என்பது முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
தற்போது போலீஸார் ஹோட்டல் முன்பதிவு தொடர்பான மின்னஞ்சல்கள், கட்டண விதிமுறைகள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் டிராவல் ஏஜென்சிக்கும் இடையே நடைபெற்ற தொடர்புகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்த அந்த நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்துடன் 10 நாள்கள் சொகுசு ஹோட்டலில் தங்கிய பின்னர் ரூ.5.74 லட்சம் பில் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. முன்பதிவு எவ்வாறு செய்யப்பட்டது, பணம் செலுத்தும் பொறுப்பு யாருக்கு இருந்தது, இறுதியில் கட்டணம் செலுத்தப்படாததற்கான காரணம் என்ன என்பவை குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
