குஜராத் மாநிலம் சூரத் நகரில் கூட்டம் நிரம்பிய மாநகரப் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்தேனா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேருந்து ஏற்கெனவே பயணிகளால் நிரம்பியிருந்ததாக கூறப்படுகிறது. பேருந்தின் உள்ளே இடம் இல்லாததால் சிலர் படிக்கட்டுப் பகுதியில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் பேருந்தில் ஏற முயன்ற தேவ் கோர்வாலா என்ற இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான சுமார் 31 விநாடிகள் கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பேருந்து நிறுத்தம் அருகே நின்றபோது தேவ் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். ஆனால் பேருந்தில் ஏற்கெனவே அதிக அளவில் பயணிகள் இருந்ததால் அவருக்கு உள்ளே செல்ல போதிய இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக இளைஞருக்கு உதவ முயன்றுள்ளனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் அவரை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே சென்ற இளைஞர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் நிரம்பிய பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து உந்தனா போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்து ஏற்பட்ட விதம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பேருந்து ஓட்டுநரின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்தார்களா, பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான முழுமையான விவரங்களை போலீஸார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
