மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கனமழையால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். செல்லும் ஓடை மழைநீரால் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேறு வழியின்றி ஆபத்தான நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகோர்த்து ஓடையை கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த சனிக்கிழமை பெய்த கனமழைக்குப் பிறகு ஓடையில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பாதையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இருப்பினும் பள்ளிக்குச் செல்லவும், மீண்டும் வீடு திரும்பவும் மாணவர்கள் அதே வழியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறிய குழந்தைகளை பெற்றோர் தோளிலும் கைகளிலும் தூக்கிச் சென்று ஓடையை கடக்கச் செய்யும் காட்சிகளும் காணொளியில் பதிவாகியுள்ளன. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழைக்காலத்தில் மட்டும் இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை என்றும், ஆண்டுதோறும் சுமார் நான்கு மாதங்கள் இதே நிலை நீடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஓடையில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் மாணவர்கள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் நீரோட்டம் அதிகமாகி கிராமத்தை விட்டு வெளியே செல்வதே சிரமமாகிவிடுகிறது. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லக்னாதோன் ஊராட்சி ஒன்றிய தலைமை செயல் அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் பாலம் அமைப்பதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுமார் 75 மீட்டர் நீளமுள்ள பாலம் தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.