சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது உறவினர்களான பிரேம் ஆனந்த், தங்க பழம், சரண்யா ஆகியோருடன் இணைந்து கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கினார். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி ஏராளமானோர் கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்தனர். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கி ஏ.டி.எம் கார்டுகளை வழங்கி அதற்கான எந்திரங்களையும் அமைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதில் அதிக வட்டி தருவதாக கூறியதால் ஜெயவேலின் கூட்டுறவு சங்கத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பணம் முதலீடு செய்தேன். அவர்கள் முதிர்வு தொகையான 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 58 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் ஜெயவேல் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து ஜெயவேலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.