தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் வில்லிவாக்கம் தொகுதியில் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவில் அவரது மனைவியின் நிறுவன விவரங்கள் விடுபட்டதாகக் கூறி, திமுக வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாகத் தனது வேட்புமனு ஏற்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, திமுகவினரை வறுத்து எடுத்துள்ளார். “தனி ஆளாக நானே 25 கோடி ரூபாய் வரி செலுத்தி இருக்கிறேன், அப்படியிருக்கும்போது நான் ஏன் சொத்துகளை மறைக்க வேண்டும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 25-ஆம் தேதி வரையிலான அனைத்துக் கணக்குகளையும் வெளிப்படையாகக் காட்டியுள்ளதாகவும், பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களைக் குறிப்பிட்டாலே போதும் என்பது கூடத் தெரியாமல் திமுகவினர் அரசியல் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
திமுக குடும்பமே திரண்டு வந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்தாலும் தனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனச் சபதமேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, இத்தனை காலமும் இந்தத் தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
