ஹோட்டல்களில் செக்-இன் செய்யும்போது அடையாளச் சான்றாக ஆதார் அட்டையின் நகலைச்  சமர்ப்பிக்கும் நடைமுறையில் விரைவில் பெரிய மாற்றம் வரவுள்ளது. இனி ஹோட்டல் செக்-இன் செயல்முறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டு எளிதாக்கப்பட உள்ளன. இதன் மூலம் நகல் எடுப்பதற்காக ஜெராக்ஸ் கடைகளைத் தேடி அலைகின்ற சிரமம் வாடிக்கையாளர்களுக்கு இனி இருக்காது.

புதிய விதிகளின்படி, ஹோட்டல் செக்-இன் செய்யும்போது QR கோட், OTP மற்றும் மொபைல் செயலி அடிப்படையிலான டிஜிட்டல் சரிபார்ப்பு முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே, ஒவ்வொரு முறையும் ஹோட்டலில் தங்கும்போதும் அசல் அட்டையையோ அல்லது அதன் நகலையோ கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. இது செக்-இன் நேரத்தைக் குறைப்பதுடன் செயல்முறையை விரைவுபடுத்தும்.

QR கோட் சரிபார்ப்பு முறையில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் செயலியில் உள்ள QR கோட்டை ஹோட்டல் நிர்வாகத்திடம் காண்பித்தால் போதுமானது. அதுமட்டுமின்றி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலமாகவும் அடையாளத்தைச் சரிபார்க்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆதார் அட்டையின் காகித நகல்களை ஹோட்டல்களில் கொடுக்கும்போது, அதில் உள்ள பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறை அறிமுகமாவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். தரவு தனியுரிமை குறித்த பயமும் இதன் மூலம் நீங்கும்.

இந்த புதிய மாற்றத்தால் பயணிகள் அனைவரும் பெரிதும் பயனடைவார்கள். அடையாளச் சரிபார்ப்பு மிகக் குறைந்த நேரத்தில் முடிந்துவிடும் என்பதுடன், காகிதப் பயன்பாடும் பெருமளவில் குறையும். மேலும், அசல் அடையாள அட்டைகளைக் கையில் எடுத்துச் செல்லும் கவலையோ அல்லது தொலைந்துவிடுமோ என்ற பயமோ இன்றி பயணிகள் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியும்.