உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தனது காதலியை சரமாரியாக அடித்துக் கொன்றுவிட்டு, விடிய விடிய சடலத்துடன் தங்கியிருந்த காதலனை போலீசார் கைது செய்தனர். காசியாபாத்தின் படேல் மார்க் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரவீன் குமார் மற்றும் ஆர்த்தி குமார் ஆகியோரிடையே நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன், ஆர்த்தியை மிகக் கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க இரவு முழுவதும் சடலத்துடனேயே உறங்கிய பிரவீன், மறுநாள் காலையில் ஆர்த்திக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தப்பிக்க முயன்றபோது ஓட்டல் ஊழியர்களால் கச்சிதமாக பிடிக்கப்பட்டார். உடற்கூறாய்வில் பெண்ணின் விலா எலும்புகள் உடைந்திருப்பதும், நுரையீரல் மற்றும் கல்லீரல் பலத்த சேதமடைந்திருப்பதும் தெரியவந்ததை அடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த நந்த்கிராம் போலீசார் பிரவீனை சிறையில் அடைத்தனர்.
