நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்த நிலையில் உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த போது ஹேர் கிளிப் இரைப்பையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்கம் மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன் அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி ஹேர் கிளிப்பை பத்து நிமிடத்தில் அகற்றினார். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.