தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த SA20 லீக் தொடரின் 4-வது சீசனில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கேப் டவுனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா அணி, இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸின் அதிரடி சதத்தின் (101 ரன்கள், 56 பந்துகள், 7 சிக்ஸர், 8 பவுண்டரி) உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது; சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (63*) மற்றும் மேத்யூ பிரிட்ஸ்கி (68*) ஜோடி பொறுப்புடன் விளையாடி 114 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய சன்ரைசர்ஸ் அணி, எய்டன் மார்க்ரமுக்கு பிறகு புதிய கேப்டன் ஸ்டப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது. அதிரடி சதம் விளாசிய டெவால்ட் பிரெவிஸ் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குவின்டன் டி காக் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.