இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட் ரசிகர்கள் காட்டும் பாரபட்சமான அணுகுமுறை குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அஸ்வின், இந்திய கிரிக்கெட் சூழலில் குறிப்பிட்ட சில வீரர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான ஆதரவையும், அதே கருத்தைச் சொல்லும் மற்ற வீரர்களுக்குக் கிடைக்கும் எதிர்மறை விமர்சனங்களையும் சுட்டிக்காட்டினார்.

ஆர்சிபி ரசிகர்களின் விசுவாசம் குறித்து அஸ்வின் பேசுகையில் கூறியதாவது: “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் ‘தல’ தோனி பாராட்டிப் பேசியதாகப் படித்தேன்.

இதே கருத்தைத்தான் கடந்த ஆண்டு நானும் முன்வைத்தேன். ஆனால், நான் சொன்னபோது மட்டும் என்னை ‘பாம்பு படை வைத்திருப்பவன்’ (விஷமத்தனமாக பேசுபவன்) என விமர்சித்தார்கள். தோனி சொன்னால் மட்டும் அது ‘தல’யின் பேச்சாகக் கொண்டாடப்படுகிறது. இப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, ஆனால் கேட்க முடியாது,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும் ரசிகர்களிடையே நிலவும் இந்த ‘ஹீரோ கலாச்சாரம்’ மற்றும் பாரபட்சமான விமர்சனங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.