சீனாவில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் அந்நாட்டு அரசு ‘ரோபோ’ போலீசாரை பணியில் அமர்த்தும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. ஷென்சென் மற்றும் ஹாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படுகின்றன.

மேலும் இவை சாலை சந்திப்புகளில் நின்றுகொண்டு, போக்குவரத்து சிக்னல்களுக்கு ஏற்ப கைகளை அசைத்து வாகனங்களைச் சீரமைக்கின்றன. குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் பாதசாரிகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் திறன் கொண்டவை.

இந்த ரோபோக்கள் இடைவிடாமல் 8 முதல் 9 மணி நேரம் வரை பணியில் ஈடுபடக்கூடியவை என்பதால், போக்குவரத்து போலீசாரின் பணிச்சுமையை இது வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள உயர் ரக கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் ஒருமுறை எச்சரித்த பின்னரும் விதியை மீறுபவர்களின் தகவல்கள் தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர நிர்வாகத்தை மேம்படுத்த சீனா மேற்கொண்டு வரும் இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.