அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான லூசிட் மோட்டார்ஸ், தனது மொத்த பணியாளர்களில் 18 சதவீதத்தினரை, அதாவது சுமார் 1,500 பேரை பணிநீக்கம் செய்வதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்நிறுவனம் 12 சதவீத ஊழியர்களை நீக்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்கள் குறைப்பு மட்டுமின்றி, அரிசோனாவின் காசா கிராண்டே பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் இரண்டாவது ஷிப்ட் (Shift) உற்பத்தி முறையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தை எளிமைப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி நீண்ட கால சந்தைப் போட்டியை எதிர்கொள்ளவும், புதிய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சில்வியோ நாபோலி தலைமையில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ‘முதன்மை செயல்பாட்டு அதிகாரி’ என்ற பதவியே ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டு, தற்காலிக சிஇஓ-வாகப் பணியாற்றி வந்த மார்க் விண்டர்ஹாஃப் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த அதிரடி மாற்றங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 158 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிக்கப்படும் என லூசிட் மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது. இதற்கான பணிநீக்க இழப்பீட்டுத் தொகையாக சுமார் 32 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ள இந்நிறுவனம், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் இந்த மறுசீரமைப்பு பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க மின்சார வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாகப் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு திட்டங்களை மாற்றி அமைத்து வரும் வேளையிலும், லூசிட் மோட்டார்ஸ் லாபப் பாதைக்குத் திரும்பும் நோக்கில், இந்த ஆண்டு பிற்பகுதியில் 50,000 டாலருக்கும் குறைவான விலையில் ‘லூசிட் காஸ்மாஸ் எஸ்யூவி’ (Lucid Cosmos SUV) என்ற காரை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
அத்துடன், சான் பிரான்சிஸ்கோவில் சொகுசு ரோபோடாக்ஸி (Robotaxi) சேவையை வழங்க உபெர் மற்றும் நியூரோ நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தில் இருந்து ஏராளமான மூத்த தலைவர்கள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
