மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளின் சரக்கு போக்குவரத்து முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் காரணமாக இந்த கடல் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், தனது நட்பு நாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வருகிறது.

மேலும் முன்னதாக இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் கூடிய கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானின் இந்த முடிவை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் வரவேற்றுள்ளார். நாள் ஒன்றுக்கு இரண்டு கப்பல்கள் வீதம் மொத்தம் 20 கப்பல்கள் இந்த ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஈரானின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்றும், இது அமைதிக்கான ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்வதாகவும் பாகிஸ்தான் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.