மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா திங்கட்கிழமை நண்பகலுக்குள் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அந்த நாட்டுப் கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய புரட்சிகர காவல் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கல்வி நிறுவனங்களையும் போர்க்களமாக மாற்றும் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.